பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கண்ணைக்கவரும் பள்ளத்தாக்குகளை ரசிப்பதற்காகப் பயணித்த இந்த பலூனில், விபத்து நடந்த சமயத்தில் பைலட் உட்பட மொத்தம் 21 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வானில் பறந்து கொண்டிருந்தபோது பலூனின் கூடைப் பகுதியில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ வேகமாகப் பரவியதை அடுத்து, பைலட் பலூனை அவசரமாகத் தரையிறக்க முயன்றதோடு, பயணிகள் அனைவரையும் கீழே குதிக்குமாறு கூச்சலிட்டுள்ளார். சிலர் கீழே குதித்து உயிர் தப்பிய நிலையில், சிலர் வெளியேற முடியாமல் பலூனோடு சிக்கிக் கொண்டனர். உயிரிழந்தவர்களில் இரண்டு தம்பதிகள், தாய், மகள், ஒரு கண் மருத்துவர் மற்றும் ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் அடங்குவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் கொடூர விபத்து குறித்து பிரேசில் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து முகமை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. விபத்துக்குக் காரணமான அந்தச் சுற்றுலா நிறுவனம் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இக்கோர விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
