தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மகிழ்ச்சியைத் இரட்டிப்பாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது.
முழுக்க முழுக்கத் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கையை அதிகரிக்கவும், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டம், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
