தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

By Swetha on ஆனி 22, 2026

Spread the love

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, வீடுகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்பது மிக அவசியம். வீட்டின் மொட்டை மாடிகள், சுற்றப்புறங்கள் மற்றும் காலி மனைகளில் வீசப்பட்டுள்ள டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், தேங்காய் சிரட்டைகள், மற்றும் டீ கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு பொருளில் தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அதனை அகற்றி கொசுக்கள் உற்பத்தியாவதை அடியோடு தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரைச் சேமித்து வைக்கும் தொட்டிகள், பீப்பாய்கள், மற்றும் குடங்கள் போன்றவற்றை எப்போதும் கொசுக்கள் புகாதவாறு இறுக்கமான மூடிகளால் மூடி வைக்க வேண்டும். மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த நீர் தேக்கக் கலன்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி காயவைக்க வேண்டும். கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுவலைகளைப் பயன்படுத்துமாறும், உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணியுமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

   

பொதுமக்களுக்குக் கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை வலி, அல்லது மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனை சாதாரண காய்ச்சல் என்று அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக, மருத்துவர்களின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாக மாத்திரைகளை வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்பச் சுகாதார நிலையங்களை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து, தகுந்த மருத்துவச் சிகிச்சையை இலவசமாகப் பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளது.