“23% கமிஷன்… விரட்டியடிக்கப்பட்ட 25 நிறுவனங்கள்”…. டி.ஆர்.பி.ராஜாவை வாயடைக்க வைத்த ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்…. அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா…!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி வருகிறார். தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 30 நாட்களே ஆவதால், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவொரு முதலீடும் மாநிலத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய தவறான அணுகுமுறைகள் மற்றும் கமிஷன் கலாச்சாரத்தால் மட்டுமே முன்னணி நிறுவனங்கள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளதாகக் கூறிய அவர், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தற்போதைய அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் பழைய நினைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், தங்களது பண்ணையார்தனத்தை விட்டுவிட்டு தவெக அரசுக்கும் பொதுமக்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலும் ஆவேசமாகப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் முன்பாகவே தனியாக 23 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கி பையில் வைத்துவிட்டுத்தான் மறுவேலையே பார்ப்பார்கள் என்ற அவலநிலை நீடித்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் லஞ்சமே இல்லாத, “ஜீரோ கரப்ஷன்” மாடல் ஆட்சியைத் தவெக மிகச் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். திமுகவின் 50 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தை, தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 30 நாட்களில் முற்றிலும் அழித்துத் துவம்சம் செய்து காட்டியிருப்பதாகவும், தமிழகத்தில் தலைவிரித்தாடிய டெண்டர் மாஃபியாவை வேரோடு அழித்து சாதனை படைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

   

தவெக அரசை “ரீல்ஸ் ஆட்சி” என்று திமுகவினர் கேலி செய்வதற்கும் அமைச்சர் கீர்த்தனா தகுந்த பதிலடி தந்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக தான் வெளியிட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தவர்களை நோக்கி, “கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப் பணத்தைச் சுருட்டி, மக்கள் பணத்தில் நீங்கள் குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தீர்களே, அப்பொழுது உங்களுக்கு இந்த மக்கள் வரிப் பணம் பற்றித் தெரியவில்லையா?” என்று அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

   

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தொழில் தொடங்க வந்த நிறுவனங்களிடம் மிகக் கொடூரமாகக் கமிஷன் கேட்டுக் கொடுமைப்படுத்திய காரணத்தால், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆசையோடு வந்த 25 முன்னணி நிறுவனங்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். இதனால் தமிழகத்திற்கு மிக எளிதாகக் கிடைத்திருக்க வேண்டிய ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட தொழில் முதலீடுகளும், அதன் மூலம் நம் நாட்டுப் பிள்ளைகளுக்குக் கிடைத்திருக்க வேண்டிய 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் ஒட்டுமொத்தமாகப் பறிபோய்விட்டதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு இழப்பிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இதற்கான ஒட்டுமொத்த ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் உரிய ஆதாரங்களுடன் தகுந்த பதிலடி கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.