தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையப் பகுதியில் திடீரென உருவான ராட்சத சுழல் காற்று, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில், மதியம் 3 மணி அளவில் திடீரென வானிலை மாறியது. வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்ட சில நிமிடங்களில், வெளிநாடுகளில் தோன்றும் ‘டொர்னடோ’ புயல் போன்ற ஒரு விசித்திரமான சுழல் காற்று வானத்திற்கும் நிலத்திற்கும் இடையே பிரம்மாண்ட புனல் வடிவில் உருவானது. இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த திடீர் சூறாவளி காற்றின் வேகம் மிகக் கடுமையாக இருந்ததால், வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அப்படியே காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பார்ப்பதற்கு அச்சு அசலாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வீசும் டொர்னடோ போலவே இந்த புழுதிச் சுழல் காட்சி அளித்ததால், தமிழகத்தில் நிஜமாகவே டொர்னடோ புயல் உருவாகிவிட்டதா என்ற விவாதமும், அச்சமும் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது.
பொதுமக்களின் இந்த அச்சத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. தென்தமிழ்நாடு முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவிய கிழக்கு-மேற்கு திசை காற்றழுத்தப் பள்ளம் (Trough) காரணமாக, தூத்துக்குடியில் வலுவான மேல்நோக்கிய காற்றோட்டத்துடன் கூடிய இடியுடன் கூடிய மழை மேகங்கள் உருவாகின. இந்த கியூமுலோனிம்பஸ் மேகத்திற்குக் கீழே ஏற்பட்ட மிக வலுவான மேல்நோக்கிய காற்றோட்டம், தரையில் இருந்த தூசியை செங்குத்தாக மேலே தூக்கி சுழற்றியதால் தான், பார்ப்பதற்கு புனல் போன்றதொரு தோற்றம் உருவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தூத்துக்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் உண்மையான ‘டொர்னடோ’ புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றும் வானிலை நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். டொர்னடோ உருவாவதற்குத் தேவையான மிக வலுவான காற்றழுத்த வேறுபாடோ, கீழ்மட்ட காற்றின் திசை மாற்றமோ பொதுவாக இங்கு ஏற்படுவதில்லை. எனவே, இது ஒரு உண்மையான டொர்னடோ கிடையாது என்றும், குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்பச்சலனம் மற்றும் தற்காலிக மேகச் சுழற்சியால் உருவான ஒரு “புழுதிச் சுழல்” மட்டுமே என்றும் வானிலை ஆய்வு மையம் தங்களது விளக்கத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
