விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அது இது எது’, ‘கலக்கப்போவது யாரு’ மற்றும் ‘சிரிச்சா போச்சு’ போன்ற புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். மேடை கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, பெண்களின் வேடங்களில் திறம்பட நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டவர். ஆனால், தற்போது இவர் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் சின்னத்திரை உலகிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
பிரபல டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாஞ்சில் விஜயனுக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது தங்கையின் திருமணச் செலவிற்காக நாஞ்சில் விஜயன் தன்னிடம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், மூன்று மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறிவிட்டுப் பல வருடங்களாக ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 மே மாதத்தில் மதுரையில் நடந்த ஒரு எக்ஸ்போவில் வைத்துப் பணத்தைக் கேட்டபோது, நாஞ்சில் விஜயனும் அவரது ஆட்களும் தன்னை அவமதித்து, மிரட்டித் தாக்கியதாக வாட்ஸ் அப் சாட் ஆதாரங்களுடன் சூர்யா தேவி குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், திருநங்கை வைஷூ (விஜே வைஷு) என்பவரும் நாஞ்சில் விஜயன் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். நாஞ்சில் விஜயனுடன் தான் 16 வருடங்கள் பழகியதாகவும், 7 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும் கூறியுள்ள அவர், தன்னை நாஞ்சில் விஜயன் காதலித்து ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை ஒரு ‘கஞ்சா வியாபாரி’ எனக் கூறி நாஞ்சில் விஜயன் அவதூறு பரப்புவதாகவும், சினிமாவில் தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்து, வீட்டிற்கே வந்து நாசப்படுத்தி விடுவதாகத் தன்னை பிளாக் மெயில் செய்வதாகவும் வைஷூ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டுத் தனக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் விளக்கம்: தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பண மோசடிப் புகார்களை நாஞ்சில் விஜயன் முற்றிலும் மறுத்துள்ளார். “என் குழந்தை மற்றும் என் அம்மா மீது சத்தியமாக நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை” என்று கூறி அவர் ஒரு விளக்க வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது இரு தரப்பிலிருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை நிலவரம் என்ன என்பது போலீஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.
