“இப்படியெல்லாம் கூட திருட முடியுமா?”… சென்னை வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனரின் பகீர் யுக்தி.. போலீஸாரே தலைசுற்றிப் போயிட்டாங்க…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறை எவ்வளவுதான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், கொள்ளையர்கள் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பெரும் சவாலாகவே உள்ளது. அந்த வகையில், சென்னையில் சிக்னல் விளக்கை மறைத்து ரயில்களை நடுவழியில் நிறுத்தி, பயணிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் (35) என்பவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரங்களில் சாதாரணமாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், இரவு நேரங்களில் இந்த நூதன கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

இவரது திருட்டு யுக்தி காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரவில் ரயில் வரும் நேரத்தில், அங்குள்ள சிக்னல் விளக்கை ஒரு துணியைக் கொண்டு குமரேசன் மறைத்து விடுவார். இதனால் ஆபத்து என்று நினைத்து ஓட்டுனர் ரயிலை நடுவழியில் நிறுத்தும்போது, சட்டென்று ரயிலுக்குள் புகுந்து பயணிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடுவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏற்கனவே இவர் மீது 6 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு, குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் பிடிபட்டுள்ள இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.