வேலூரே நடுங்கிப்போச்சு..! பிரீசர் பாக்ஸில் 6 வயது சிறுவனை கொன்று… அத்தை சொன்ன அந்த காரணம்.. ஆனால் ஊரே சொல்லும் பகீர் பின்னணி..!!

By Soundarya on ஆனி 19, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியில், 6 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவனது உடல் பிரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேல்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் – ஆஷா தம்பதியினரின் 6 வயது மகன் முகிலன், கடந்த 40 நாட்களாக அவனது அத்தை ரேவதி மற்றும் பாட்டி விஜயா ஆகியோரின் பராமரிப்பில் இருந்துள்ளான். இந்நிலையில், ஜூன் 14 அன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அவனது அத்தை ரேவதி தோசை கரண்டியால் சரமாரியாக அடித்துக் கொடுமைப்படுத்தியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சிறுவன் முகிலன் உயிரிழந்ததும், அத்தை ரேவதியும் பாட்டியும் சேர்ந்து சிறுவனின் சடலத்தை மறைத்து, இறந்தவர்களை வைக்கும் பிரீசர் பாக்ஸில் வைத்துள்ளனர். திடீரென பிரீசர் பாக்ஸ் கொண்டு வரப்பட்டதைக் கண்டும், குழந்தையின் இறப்பில் சந்தேகம் அடைந்தும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மேல்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

   

இந்தக் கொடூரக் கொலைக்குக்குப் பின்னால் மாந்திரீகப் பின்னணி இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பலத்த சந்தேகம் எழுப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ரேவதி மற்றும் அவரது தாயார் விஜயா ஆகிய இருவரும் தொடர்ந்து மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், அமாவாசை தினத்தில் சிறுவனைப் பலி கொடுத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், தம்பிக்கும் அவனது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததற்குக் குழந்தையே காரணம் என்ற ஆத்திரத்தில் அடித்ததாக ரேவதி போலீசாரிடம் கூறியுள்ளார். தற்போதைக்கு ரேவதியைக் கைது செய்துள்ள போலீசார், மாந்திரீகக் கோணத்திலும் பாட்டி விஜயாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.