திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவு..? எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய திட்டம்… பரபரப்பு தகவல்..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டது தொடர்பாக மதிமுகவுக்குள் ஏற்கனவே அதிருப்தி நிலவி வந்த சூழலில், தற்போது கூட்டணி மாற்றம் குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி மாறும் பட்சத்தில் திமுக தரப்பில் இருந்து ஏதேனும் அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால், தங்களின் இரண்டு எம்எல்ஏ-க்களையும் பதவியை ராஜினாமா செய்ய வைக்க மதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தவெகவுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர மதிமுக தயாராகி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், தவெக அரசுக்கு ஆதரவளிப்பதா அல்லது கூட்டணியில் இணைவதா என்பது குறித்து வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளதால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.