செல்போன் பயன்பாட்டிற்கு எதிராக 10 வயது பள்ளி மாணவன் ஒருவன் 16 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கான காப்பகத்தில் தங்கி, 4-ஆம் வகுப்பு படித்து வரும் அரவிந்த் ரத்தோடு என்ற மாணவனே இந்த சாதனையைச் செய்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்றே, அவர் தங்கியிருந்த காப்பகத்தில் இருந்து பள்ளி வரை இந்த நீண்ட தூரத்தை ஓடியே கடந்துள்ளார்.
இன்றைய நவீன உலகில், குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கும் அவர்களை அமைதிப்படுத்துவதற்கும் பெற்றோர் செல்போன்களை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மன இறுக்கம் ஏற்படுவதோடு, மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாகக் குழந்தை நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய செல்போன் மோகத்தில் இருந்து சிறுவர்களை விடுவித்து, அவர்களின் உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு ஓட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் காப்பகத்தில் வளரும் இந்த சிறுவனின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த ஓட்டத்தை, உள்ளூர் மக்கள் திரண்டு வந்து வெகுவாகப் பாராட்டியுள்ளனர். செல்போன் திரைகளிலேயே மூழ்கிக் கிடக்காமல், வெளிப்புற விளையாட்டுகளிலும் செயல்பாடுகளிலும் சிறுவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சிறுவனின் செயல் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
