விமர்சித்தவர்களை ‘தற்குறி’ என சாடிய மாஸ்டர் மகேந்திரன்… அடங்காத மின்வெட்டு சர்ச்சை… கொதிக்கும் நெட்டிசன்கள்….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் மாஸ்டர் மகேந்திரன். வளர்ந்த பிறகு திரையுலகில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையாமல், சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘29’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி, தற்பொழுது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன், அவருக்கு எதிரான கண்டனக் குரல்களையும் வலுக்கச் செய்துள்ளது.

அந்தப் பேட்டியில் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்துப் பேசிய மகேந்திரன், “இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா? ஜாலியாக இருந்தீர்களா?.. சரி ஆறு மாதங்கள் மின்வெட்டுடன் இருக்க முடியாதா?.. சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்தது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. மின்வெட்டு இருந்தால் என்ன? ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள் என சொல்கிறேன். என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோலாரிலிருந்து எப்படி லைட்டை எரிய வைக்க வேண்டும்; ஃபேனை ஓட வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். விஜய்யிடம் கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?.. எத்தனை காலம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். கேள்வி மட்டும் கேட்டால் பதில் கிடைத்துவிடுமா?.. கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதில் கிடைக்கும்” என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார்.

   

மகேந்திரனின் இந்த ‘கேள்வி கேட்காதீர்கள்’ என்ற கருத்து, சாமானிய மக்கள் மற்றும் சமூக வலைதள வாசிகளிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. மின்வெட்டால் மக்கள் அவதிப்படும் சூழலில், பொறுப்பற்ற முறையில் அவர் பேசியதாகக் கூறி, அவரது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றின் மூலம் தனது பேச்சுக்கு மகேந்திரன் விளக்கமளித்தார். ஆனால், அந்த விளக்கம் எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

   

தனது விளக்கத்தில், “சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ரீல்ஸ்களால் நான் கூறிய கருத்துக்கள் முழுமையாக இருக்காது. அதுதான் இங்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. மின்சார தேவையை சமாளிக்க சோலார் மின்சாரமே சிறந்த வழி என்றும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சோலார் முறையை ஏன் செயல்படுத்தக்கூடாது என்றுதான் கேட்டேன். என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறார்கள். தவறாக புரிந்துகொண்டவர்கள்தான் தற்குறி. நான் தற்குறியா?.. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தன்னை விமர்சிப்பவர்களை ‘தற்குறி’ என அவர் சாடியிருப்பது, மக்கள் மத்தியிலும் நெட்டிசன்களிடமும் தற்பொழுது இன்னும் கூடுதல் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் பெற்றுத் தந்துள்ளது.