ஈரானுடன் தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலிலும், லெபனான் மற்றும் காசா பகுதிகள் மீதான ராணுவத் தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 570 சதுர கிலோமீட்டர் பகுதியில், தங்களுக்கு எவ்வளவு காலம் தேவையோ அவ்வளவு காலம் தங்களது ராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்த உடன்பாடுகளுக்கு மத்தியிலும் இஸ்ரேல் எடுத்துள்ள இந்த அடங்காத நிலைப்பாடு, காசா மற்றும் லெபனான் மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
