செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், தற்போது முற்றிலும் புதிய மற்றும் விசித்திரமான வேலைவாய்ப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, AI மூலம் செயல்படும் மனித ரோபோக்களுக்கு அன்றாட மனிதச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுக்கும் புதிய வருமான வழிமுறை ஒன்று பரவி வருகிறது. இந்த வினோதமான பணியில் இந்திய அளவில் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாய், சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனித்துவமான முறையில் வருமானம் ஈட்டி வருகிறார். அவர் தனது தலையில் செல்போன் ஒன்றைச் சாதனமாகக் கட்டிக்கொண்டு, தான் தினசரி செய்யும் சமையல், பெருக்குதல் போன்ற வீட்டு வேலைகளைத் துல்லியமாகப் படம் பிடித்துத் தரவுகளாக அனுப்பி வருகிறார். இந்தத் வீடியோ பதிவுகளை ரோபோக்களின் பயிற்சிக்காக வழங்குவதன் மூலம், அவர் ஒரு மணி நேரத்திற்குச் சுமார் ரூ. 250 வரை சம்பாதிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய புதிய தொழில்நுட்ப முறையானது தற்காலிகமாகப் பலருக்கு எளிய வேலைவாய்ப்புகளையும், சுலபமான வருமானத்தையும் உருவாக்கித் தந்தாலும், இதன் எதிர்காலம் குறித்த கடுமையான அச்சமும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. இந்த மனிதத் தரவுகளைக் கொண்டு ரோபோக்கள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டால், எதிர்காலத்தில் மனிதர்கள் செய்யும் சாதாரண வேலைகள் உட்பட லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும், வேலைகளும் பறிபோகும் பேராபத்து இருப்பதாக நெட்டிசன்கள் தங்களது கவலைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
