திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28). இவருக்கு சுமதி (26) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில், சமீபகாலமாக சடையாண்டி யாருடனோ போனில் பேசியதால் தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென மாயமான சடையாண்டியை, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். விசாரணையில், தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, புத்தூர் பிச்சம்பட்டியைச் சேர்ந்த நாகேஷ்வரி (21) என்ற பெண்ணை சடையாண்டி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்தபோது, சடையாண்டி தனது முதல் மனைவி அடிக்கடி தகராறு செய்ததால் இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறினார். மேலும், “எனக்கு இரண்டு மனைவிகளுடனும் சேர்ந்து வாழ சம்மதம், இருவரையும் என்னுடன் அனுப்பி வையுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் கூற, போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில், இரண்டாவது மனைவி நாகேஷ்வரி தனக்கு சடையாண்டியுடன் வாழ விருப்பம் என்றும், முதல் மனைவி சுமதி தனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருதி கணவரைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் போலீசாரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
இறுதியாக போலீசார் சடையாண்டியிடம், முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றும், வழக்குப்பதிவு செய்தால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து இரண்டாவது மனைவி நாகேஷ்வரிக்கு அறிவுரைகள் கூறி அவரைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், சடையாண்டிக்கு உரிய புத்திமதிகளைக் கூறி, அவரை முதல் மனைவி சுமதி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
