“‘இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்’… ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ 6 மாதக் கணக்கு… அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர்…!

By Nanthini on ஆனி 12, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினர், தமிழகம் முழுவதும் பயணித்து தங்களது விரிவான அறிக்கைகளைத் தலைமையிடம் ஒப்படைத்தனர். தங்களின் அறிக்கை குறித்து தலைமை விவாதிக்கும், உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வந்த தங்களுக்குப் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு அவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். ஆனால், அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டம் அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே மிஞ்சியிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்காமல், “அறிக்கையைப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். மேலும், “இந்த புதிய ஆட்சி 6 மாதங்கள் கூட நீடிக்காது, எனவே தலைமை அறிவுறுத்தும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று கூறிவிட்டு நகர்ந்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு வழிவகுப்பார் என்று நம்பியிருந்த குழுவினருக்குத் தலைவரின் இந்த மேலோட்டமான பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

மறுபுறம், கூட்டத்தில் குழுவினரைப் பேசச் சொன்ன உதயநிதி ஸ்டாலினின் அணுகுமுறையும் அவர்களுக்குச் சலிப்பையே தந்தது. களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், எதிர்கொண்ட உட்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகளிடமிருந்து வந்த இடையூறுகள் எனப் பல உண்மைகளை அவர்கள் உடைத்துப் பேசினர். ஆனால், அதற்கு உரிய தீர்வை வழங்குவதை விடுத்து, ஆய்வுக்குழுவினரையே குற்றம்சாட்டும் தொனியில் உதயநிதி திருப்பிக் கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

   

“18 மாவட்டங்களில் திமுகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை; அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்ற மாவட்டங்களிலாவது அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்தோம்” என்று கள ஆய்வுக் குழுவினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலுக்கு முன்பு ‘ஒரு தொகுதியில் தோற்றாலும் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும்’ என்று எச்சரித்த தலைமை, தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பென் அமைப்பின் பழைய ஆலோசனைகளையே மீண்டும் வழங்குவதாக அவர்கள் குமுறுகின்றனர். “இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்கிற ரீதியில், எதற்கு இந்த குழு மற்றும் பில்டப் என்று முணுமுணுத்தபடியே அவர்கள் அறிவாலயத்தை விட்டு வெளியேறினர்.