வீட்ல சும்மா இருக்காங்கன்னு சொல்லாதீங்க… மாதம் ரூ.30,000 சம்பளம்… இல்லத்தரசிகளின் உழைப்புக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி…. பெண்களின் தலையெழுத்தையே மாற்றிய உச்சநீதிமன்றம்…!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

வீட்டைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என இல்லத்தரசிகள் தினமும் ஓய்வில்லாமல் உழைத்து வருகின்றனர். நீண்ட காலமாக இவர்களின் உழைப்பு பொருளாதார ரீதியாக அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சாலை விபத்தில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டை கணக்கிடும்போது, அவர்கள் வீட்டில் செய்த பணிகளின் மதிப்பை மாதம் குறைந்தபட்சம் ரூ.30,000 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.

   

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்ற இல்லத்தரசி, கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கு, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இறுதி விசாரணைக்கு வந்தது. இந்த 20 ஆண்டுகால நீண்ட தாமதத்திற்கு நீதிமன்றம் தனது கவலையைத் தெரிவித்ததுடன், சாலை விபத்து இழப்பீட்டு வழக்குகளை இயன்றவரை ஓராண்டுக்குள் முடித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

   

இதுவரை நீதிமன்ற வழக்குகளில், இல்லத்தரசிகளின் வருமானத்தை சாதாரண திறன்மிக்க தொழிலாளர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டு மதிப்பிடும் நடைமுறையே இருந்து வந்தது. ஆனால், இந்த அணுகுமுறை இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் வீட்டுப் பராமரிப்பு மற்றும் குடும்ப நிர்வாகப் பணிகளின் உண்மையான பொருளாதார மதிப்பை பிரதிபலிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இல்லத்தரசிகள் வெறும் குடும்பப் பொறுப்புகளை மேற்கொள்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் “தேசத்தை உருவாக்குபவர்கள்” என்ற உன்னதமான அங்கீகாரத்திற்குத் தகுதியானவர்கள் என்றும் நீதிபதிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

 

இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் சமையல், குழந்தை பராமரிப்பு, முதியோர் கவனிப்பு, வீட்டு நிர்வாகம் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். அவர்களுக்கு நேரடி ஊதியம் வழங்கப்படவில்லை என்பதற்காக, அந்த உழைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை இந்த தீர்ப்பு ஆணித்தரமாக உணர்த்துகிறது. நீண்ட காலமாகப் பொருளாதார மதிப்பீட்டில் புறக்கணிக்கப்பட்டு வந்த பெண்களின் தியாகத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் சமூக அங்கீகாரத்தையும், சட்ட ரீதியான பாதுகாப்பையும் வழங்கும் ஒரு முக்கிய வழிகாட்டுதலாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.