விஜய் தம்பி..! அன்னைக்கு நரம்பு புடைக்க பேசினீங்களே… உங்களை சுற்றியிருக்கும் அந்த 4 ‘பவர் சென்டர்கள்’ யார்…? அலறும் தலைமைச் செயலகம்… தவெக ஆட்சியைத் தோலுரித்த ஆர்.பி.உதயகுமார்..!!

By Soundarya on ஆனி 11, 2026

Spread the love

“என் ஆட்சியில் பவர் சென்டரே கிடையாது; நான் மட்டும்தான் ஒரே பவர் சென்டர்” என்று கடந்த மாதம் முதலமைச்சராகப் பதவியேற்ற போது விண்ணதிர, நரம்பு புடைக்க முழங்கியதை தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி.உதயகுமார் நினைவூட்டியுள்ளார். ஆனால், தற்போது முதலமைச்சரைச் சுற்றி ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகிய 4 பேர் புதிய ‘பவர் சென்டராக’ உருவெடுத்து, ஒட்டுமொத்த தலைமைச் செயலகத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் என்று அவர் சாடியுள்ளார். இந்த நால்வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலக நிர்வாகத்தையும் தங்களது முழு கட்டுக்குள் வைத்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைச் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள இந்த நான்கு பேரும் மொழிப்போர் தியாகிகளா, தமிழ் இனத்திற்காகச் சிறை சென்றவர்களா அல்லது இந்த மண்ணுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம்பெற்ற தியாகச் செம்மல்களா என்று ஆர்.பி.உதயகுமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இவர்களுக்கும் தலைமைச் செயலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும், இவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்து கொடுத்து கோட்டையிலே அமர வைத்திருப்பது ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தி இருப்பது முதலமைச்சர் தம்பி விஜய்க்கு தெரியுமா, தெரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

விஜய் முதலமைச்சராக இருப்பதால், அரசு மரபுப்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவருக்கு மட்டுமே முதல் மரியாதையைச் செலுத்த வேண்டும் என்பதை ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தற்போது முதலமைச்சரின் நண்பர்களுக்கும், அவரது நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்த வேண்டிய துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது வேதனையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகார வர்க்கத்தினர் இவர்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது, அரசு நிர்வாகத்தின் மாண்புகளையே முற்றிலுமாகக் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.