மஸ்க்கிற்கு விழுந்த பலத்த அடி!.. ஸ்டார்லிங்க் சேவைக்கு முட்டுக்கட்டை போட்ட இந்தியா.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

By Muthu Mani on ஆனி 10, 2026

Spread the love

இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கவிருந்த எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்திற்கு, இறுதிப் பாதுகாப்பு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தற்போது தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. ஈரான் வளைகுடா போரின் போது ஸ்டார்லிங்க் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்வதேசப் பாதுகாப்புப் புகார்களைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஈரானில் வணிக உரிமம் பெறாத நிலையிலும், அங்கு நடக்கும் அமெரிக்க-ஈரான் மோதலில் ஸ்டார்லிங்க் இணைய முனையங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. போர்க்கால சூழ்நிலைகளில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தை இந்திய அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்ற அச்சம் பாதுகாப்பு முகமைகளுக்கு எழுந்துள்ளதால், இந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான ஆரம்பகட்ட உரிமத்தை ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த ஓராண்டிற்கு முன்பே பெற்றுவிட்டதோடு, இதற்காகத் தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் முன்னிலையில் பல சோதனைகளையும் நடத்திக் காட்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய உலகளாவிய பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பாதுகாப்பு விதிகளுக்கு இந்நிறுவனம் எவ்வாறு முழுமையாகக் கட்டுப்படும் என்பது குறித்து கூடுதல் விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதனால், இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அமைச்சரவை வழங்கவிருந்த ஒப்புதல் திட்டமும் தற்போது தற்காலிகமாக முடங்கியுள்ளது.

   

மறுபுறம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் பங்குச்சந்தையில் சுமார் $1.75 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ₹166.99 லட்சம் கோடி மதிப்பில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிடத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இந்த மாபெரும் வணிக வளர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சந்தை என்பது மிக அவசியமான ஒன்றாகும். ஆனால், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு காரணங்களால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிகத் தடையானது, ஸ்டார்லிங்கின் இந்திய வருகையைத் தள்ளிப்போகச் செய்து எலான் மஸ்க்கின் உலகளாவிய வணிகத் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.