“சிஸ்டம் இன்னும் திமுக பக்கம்தான்”… முதல்வராக பொறுப்பேற்ற விஜய், அதிகாரிகளை சமாளிக்கப் போகும் ‘அந்த’ ஒரு வழி….!

By Nanthini on ஆனி 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம் அரியணை ஏறியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் திரைத்துறையிலிருந்து அரசியல் களம் புகுந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தவெக அரசு அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தமிழக அரசியலில் சவால்களும், விவாதங்களும் ஒரே நேரத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள்ளேயே சட்ட ஒழுங்குப் பிரச்சனை, மின்தடை போன்ற புகார்களை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தொடக்கத்தில் ஆறு மாத காலம் வரை புதிய ஆட்சியை விமர்சிக்க மாட்டோம் என்று கூறிய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது “இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது” என அரசியல் மேடைகளில் பேசத் தொடங்கியிருப்பது தவெக அரசுக்கு எழுந்துள்ள ஆரம்பகால சவால்களைக் காட்டுகிறது. இதற்கு தவெக அமைச்சர்களும் நிர்வாகிகளும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தங்களால் இயன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

   

இருப்பினும், தவெக அரசுக்கு தற்போது எழுந்துள்ள மிக முக்கிய சவாலாகப் பார்க்கப்படுவது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மைதான். பல ஆண்டுகளாகத் துறைகளில் ஊறிப்போன லஞ்ச, ஊழல் முறைகேடுகளுக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாலும் சில அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். மின்தடைப் பிரச்சனை குறித்துப் பேசிய அமைச்சர் சி.டி. நிர்மல்குமார், “மின்சாரத் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளால்தான் பிரச்சனை” என்று குறிப்பிட்டிருப்பது, அரசு இயந்திரத்திற்குள் இன்னும் திமுக அபிமானிகளும், தவெக அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளும் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

   

அரசு அதிகாரிகள் தங்களது ஈகோவையும், பழைய அரசியல் அபிமானங்களையும் துறந்து, “இனி லஞ்சம் வாங்க முடியாது, நேர்மையாகச் சம்பளத்திற்கு மட்டுமே உழைக்க வேண்டும்” என்ற மனநிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்வது தவெக அரசின் சுமூகமான பயணத்திற்கு அவசியமாகும். இந்த நிர்வாக மாற்றமும் அதிகாரிகளின் மனநிலை மாற்றமும் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பதால், அதுவரை தவெக அரசுக்கு நிர்வாக ரீதியாகக் கெட்ட பெயர் ஏற்படுத்தச் சில சக்திகள் முயலக்கூடும். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு அதிகாரிகளைச் சரியாகக் கையாண்டு, அரவணைத்தும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் சிஸ்டத்தைச் சீரமைத்து ஆட்சியை நடத்துவதில்தான் முதல்வர் விஜயின் உண்மையான ஆளுமைத்திறனும் தவெக அரசின் எதிர்கால வெற்றியும் அடங்கியுள்ளது.