சவுக்கு மீடியா நிறுவனரும், பிரபல ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான மாலை நேரத்தில், திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பெரும் ஏமாற்றமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்த உதயநிதி ஸ்டாலின், கோபத்தில் தொலைக்காட்சியை உடைத்துவிட்டு, தனது தாயார் துர்கா ஸ்டாலினிடம் சென்று ‘விஜயையெல்லாம் நான் எப்படி முதல்வராகப் பார்ப்பது?’ என்று கூறி கதறி அழுததாக சவுக்கு சங்கர் விவரித்துள்ளார்.
மகன் அழுவதைக் கண்டு வருத்தமடைந்த துர்கா ஸ்டாலின், உடனடியாக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளைத் தன் இடத்திற்கு வரவழைத்துள்ளார். “தம்பி அழுதுகொண்டிருக்கிறான்… நீங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறீர்கள்? போய் ஏதாவது செய்யுங்கள்” என்று அவர்களிடம் துர்கா ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னரே, சேகர்பாபு மற்றும் திமுகவின் முக்கியப் புள்ளிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். “நாங்கள் வெளியில் இருந்து உங்களுக்கு ஆதரவு தருகிறோம்; நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமையுங்கள், நீங்களே முதலமைச்சராக இருங்கள். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் விஜய் முதல்வராக வரக்கூடாது” என்ற நிபந்தனையோடு திமுக தரப்பு அதிமுகவிடம் தூது சென்றதாக சவுக்கு சங்கர் அம்பலப்படுத்தியுள்ளார்.
திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) யாருக்கும் தெரியாது என்று சவுக்கு சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், அதிமுகவின் முக்கியத் தலைவர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கத் தயாராக இருந்துள்ளனர். இவர்களை நேரில் அழைத்துப்பேசிய எடப்பாடி பழனிசாமி, “சற்றுப் பொறுமையாக இருங்கள், நாம் திமுகவின் ஆதரவோடு ஆட்சி அமைக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சி.வி.சண்முகமும் வேலுமணியும், “திமுக ஆதரவோடு நாம் ஆட்சி அமைத்தால் மக்கள் நம்மைக் காரித் துப்புவார்கள்” என்று எச்சரித்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை என்றும், “திமுக வெளியில் இருந்துதான் ஆதரவு தருகிறது, ஆட்சி நம்முடையதுதான்” என்று சமாதானம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரகசியத் திட்டத்தின் காரணமாகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவசர அவசரமாகப் பாண்டிச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் என்றும், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ‘இரண்டு நாட்களில் நிலைமை மாறும்’ என்று குறிப்பிட்டதன் உண்மையான பின்னணி இதுதான் என்றும் சவுக்கு சங்கர் விளக்கியுள்ளார். மேலும், திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைப்பதற்காக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மற்றும் பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் புதிய அமைச்சரவையில் இடமளிக்க எடப்பாடி பழனிசாமி சம்மதித்ததாகவும், திமுக கூட்டணிக்கு மொத்தம் 15 அமைச்சர் பதவிகளை விட்டுக் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் சவுக்கு சங்கர் தனது பேட்டியில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
