தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவெக எம்எல்ஏ சரவணன் மிரட்டி வருகிறார் என்றும் இது கண்டனத்துக்குரியது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களை பாலியல் ரீதியாக வேட்டையாடுவதிலும், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதிலும் திமுகவையே தவெக மிஞ்சிவிட்டது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
குற்றப் பின்னணி கொண்டவர்களை அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்களை எப்படி ஒடுக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களின் பாதுகாப்பிற்காகப் படை அமைப்பதாக விளம்பரம் தேடிய முதல்வர் ஜோசப் விஜய், தற்போது தனது சொந்தக் கட்சியிலேயே பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பது கண்டனத்திற்குரியது என்றும் சாடியுள்ளார். எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் தவெக எம்எல்ஏ சரவணனை முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதோடு, முதல்வர் ஜோசப் விஜய் தனது கட்சியில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர்களைக் கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
