மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையின் உல்வே செக்டார் 8 பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், இரவு நேரத்தில் தொடரும் மின்வெட்டால் கடும் அவதிக்குள்ளாகி வந்தார். தினமும் இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் அவர், மறுநாள் காலை 6 மணிக்கே மீண்டும் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நள்ளிரவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், போதிய தூக்கமின்றி அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்குப் பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்தும், அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர் தூக்கமின்மையால் மனமுடைந்த அந்த இளம்பெண், தனது குமுறலை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில், “நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. சில மணி நேரங்களே ஓய்வெடுக்க முடியும் என்ற நிலையில், இப்படி மின்சாரம் இன்றி தவிப்பது வேதனையாக உள்ளது” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்த வீடியோவிற்குப் பிறகும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகளுக்குப் பாடம் புகட்ட ஒரு அதிரடி முடிவை எடுத்தார். வழக்கம்போல் ஒரு நாள் இரவில் மின்சாரம் தடைப்பட்டபோது, அவர் தனது கையில் தூங்கும் தலையணையை எடுத்துக் கொண்டு நேராகப் பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கே சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம், “என் வீட்டில் மின்சாரம் இல்லாததால் என்னால் தூங்க முடியவில்லை. உங்கள் அலுவலகத்தில் மின்சாரம் இருக்கிறது; கதவைத் திறங்கள், நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்” என்று கூறி அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த மின்வாரிய ஊழியர்கள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இளம்பெண் தலையணையுடன் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று நியாயம் கேட்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது. இதே வேளையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லப் பகுதி மற்றும் அவர் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதி உள்ளிட்ட சென்னையின் பல இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் போராடி வரும் சூழலில், இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அடிப்படைத் தேவையான மின்சாரத்தைக் கூட தடையின்றி வழங்காத அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், அந்தப் பெண்ணின் துணிச்சலான செயலைப் பாராட்டியும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவுக் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
