உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமா பகுதியில், திருமணத்தின் போது ஏற்பட்ட வரதட்சணை மற்றும் ‘மஹர்’ தொகை தொடர்பான தகராறில் மணப்பெண்ணின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த கொடூரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரெய்லி பகுதியிலிருந்து வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணப் பேச்சுவார்த்தையின் போது முதலில் ஸ்கூட்டர் கேட்டு, பின்னர் மோட்டார் சைக்கிள், இறுதியாக ₹1 லட்சம் ரொக்கம் என அடுத்தடுத்து தங்களின் வரதட்சணை பேராசையை அதிகரித்துள்ளனர். இந்த நிலையில், நிக்காஹ் சடங்கின் போது மஹர் தொகையை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப் பெண் வீட்டார் வலியுறுத்த, மாப்பிள்ளை வீட்டார் ரூ.21,000 மேல் தர முடியாது எனப் பிடிவாதம் பிடித்ததால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இந்த கடும் மன உளைச்சல் மற்றும் வாக்குவாதத்தின் போதே மணப்பெண்ணின் தந்தையான சாதிக் என்பவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தையின் மரணச் செய்தி கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும், திருமண மண்டபத்திற்குள் இருந்த மாப்பிள்ளை முகமது ஆரிஃப் மற்றும் அவரது உறவினர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துத் சரமாரியாகத் தாக்கினர். இதில் தப்பியோட முயன்ற சிலர் பக்கத்து வீட்டின் கூரை வழியாகக் குதித்த போது, கூரை இடிந்து விழுந்து சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காதிமா போலீசார், தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, மணமகன் உள்ளிட்டோரை மீட்டனர். தற்போது அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, இந்த மரணம் மற்றும் வரதட்சணை கொடுமை குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
