“என் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்!”.. முதலமைச்சர் விஜய் இருக்கைக்குப் பின்னால் நடந்த ‘அந்த’ அரசியல் ட்விஸ்ட்.. நெல்லை மேயர் கொடுத்த அதிரடி விளக்கம்..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயருக்குத் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் அமர்ந்துதான் அவர்கள் பொதுமக்களைச் சந்தித்துக் கோரிக்கை மனுக்களைப் பெறுவது, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். தற்போது நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், மேயர் அமரும் முதன்மை இருக்கைக்கு மேலே முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தையும் மேயர் அறையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருந்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்களுக்கு அருகிலேயே தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும் முறைப்படி வைக்கப்பட்டது. ஆனால், புதிய முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்ட பிறகு, அதற்கு கீழே இருக்கும் தனது பிரதான மேயர் இருக்கையில் அமர்ந்து பணியாற்றுவதை மேயர் ராமகிருஷ்ணன் திடீரெனத் தவிர்த்து வருகிறார்.

   

முதன்மை இருக்கைக்குப் பதிலாக, அதே அறையின் மற்றொரு பகுதியில் போடப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு, தன்னைச் சந்திக்க வரும் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் மனுக்களைப் பெற்று வருகிறார். அந்த சோபாவுக்கு அருகே தனியாக மேசை மற்றும் நாற்காலிகள் போடப்பட்டு, அதன் மீது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் மற்றும் சிறிய அளவிலான கருணாநிதி சிலையும் வைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் புகைப்படத்தின் கீழ் உள்ள இருக்கையைப் புறக்கணித்துவிட்டு, சோபாவில் அமர்ந்து மேயர் பணியாற்றும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

   

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து மேயர் ராமகிருஷ்ணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னை அரசியல் ரீதியாக உருவாக்கிய தனது திமுக தலைவர்களின் படங்களுக்கு அருகிலேயே அமர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் அங்கு அமர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்திற்குக் கீழ் அமர்ந்து பணியாற்ற தனக்கு விருப்பம் இல்லை என்பது போன்ற பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும், இந்த இடமாற்றத்திற்குப் பின்னால் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.