உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், நடுரோட்டில் வயதான தந்தையை மகன் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. சஹாரன்பூரின் குதுப்ஷேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானக்மவ் பகுதியில் இந்த அநாகரிகமானச் செயல் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளதுடன், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஹாஜி தஹ்சீன் என்ற முதியவரை அவரது மகன் குல்ஃபிஷான் நடுரோட்டில் வைத்து ஓங்கி அறைவதும், அவரது கழுத்தை நெரிக்க முயல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு தகராறின் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. பெற்ற தந்தையையே மகன் இப்படி மிருகத்தனமாகத் தாக்கும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சஹாரன்பூர் போலீசாரைக் டேக் செய்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதை அடுத்து, சஹாரன்பூர் போலீசார் உடனடியாகச் செயல்பட்டு தப்பியோடிய குற்றவாளியான மகன் குல்ஃபிஷானை அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துப் பகிர்வு தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் குடும்பத்தினரிடமிருந்து இன்னும் முறையான புகார் எதுவும் வரவில்லை என்றாலும், போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
