உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் கோவிந்த் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குஜைனி பகுதியில், 12 வயது சிறுமியான திவ்யான்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தீப் மிஸ்ரா என்பவரின் மகளான திவ்யான்ஷியும் அவளது தாயார் மாதுரியும் அப்பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். அதே வீட்டில் மற்றொரு பகுதியிலும் ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த மற்றொரு வாடகைதாரரின் வீட்டில் இருந்த மேக்கப் கிட் பெட்டி மற்றும் சில நகைகள் இருந்த பெட்டியை திவ்யான்ஷி விளையாட்டாக எடுத்து வந்துள்ளார்.
மறுநாள் சனிக்கிழமை காலையில் அந்தப் பெட்டி காணாமல் போனது குறித்து திவ்யான்ஷியின் தாயாருக்கு தெரியவந்த போது, அவர் தனது மகளிடம் விசாரித்துள்ளார். சிறுமியும் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்தப் பெட்டி உடனடியாக மற்றொரு வாடகைதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், அந்த குடும்பத்தினர் சிறுமியை “திருடி” என்று கூறி தொடர்ந்து வசைபாடி, அவதூறாகப் பேசியுள்ளனர். விளையாட்டாகச் செய்த காரியத்திற்காக தன்னை எல்லாரும் ‘திருடி’ என்று சொல்லி கேலி செய்த வார்த்தைகள் சிறுமியின் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான திவ்யான்ஷி, சனிக்கிழமை மாலை அவளது தாயார் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில், தாயின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய தாய், தனது ஒரே மகள் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கோவிந்த் நகர் காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட வாடகைதாரர்கள் மீது விசாரணை நடத்தி, உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்ட பின் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
