“வாயை அடக்கி பேசுங்க… வாய்ப்பு தேடி அலைந்த ஆதவ் அர்ஜுனா?”… கே.பி.முனுசாமி போட்ட “ரூட் மேப்” லிஸ்ட்… பனையூரில் நடந்த அதிரடி ட்விஸ்ட்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஆனந்தன், என்.ஆர்.சிவபதி மற்றும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ள சூழலில், இந்த திடீர் கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த இணைப்பு விழாவின் போது பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக தலைமை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒட்டுமொத்த அதிமுகவினரும் தவெகவை ஆதரித்ததால் தான் தவெக தேர்தலில் வென்றது என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவின் தற்போதைய வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று சாடினார். மேலும், தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும், இரு கட்சிகளும் சேர்ந்து ‘யானை பேரம்’ நடத்தியதாகவும் குற்றம்சாட்டிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் தவெகவிற்கு வருவார்கள் என்றும், அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பேசினார்.

   

ஆதவ் அர்ஜுனாவின் இந்த விமர்சனத்திற்கு அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்த சுயநலவாதிகள் தான் தற்போது தவெகவில் இணைந்திருப்பதாகக் சாடினார். தவெகவில் இணைந்துவிட்டார்கள் என்பதற்காக, அதிமுகவின் உண்மையான தொண்டர்களையும், அதன் வரலாற்றையும் ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்தி, தான்தோன்றித்தனமாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆவேசத்தைப் பதிவு செய்தார்.

 

மேலும், ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்று எச்சரித்த கே.பி.முனுசாமி, அவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி பேச எந்த அருகதையும் அற்றவர் என்று குறிப்பிட்டார். ஆதவ் அர்ஜுனா வாய்ப்புகளுக்காக திமுக, விசிக எனப் பல கட்சிகளுக்கு ஓடிவிட்டு, இறுதியாக அதிமுகவில் இடம் கிடைக்காததால் தான் தவெகவிற்குச் சென்று அமைச்சர் ஆகியுள்ளார் என்று விமர்சித்தார். இனியாவது மற்ற கட்சிகளின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதிமுக குறித்து அவதூறாகப் பேசுவதை நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராக அதிமுக சார்பில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.