ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தனது சமையலறைகளில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 800-க்கும் மேற்பட்ட ஐஆர்சிடிசி சமையலறைகளில் மொத்தம் 2,394 ஏஐ வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி தலைமையகத்தின் பிரதான கண்காணிப்பு அறையுடன் (War Room) நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. மனிதர்களை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய அமைப்பைக் கண்காணிப்பது சாத்தியமற்றது என்பதால் இந்த அதிரடி முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
இந்த அதிநவீன ஏஐ கேமராக்கள், சமையலறைகளில் எறும்பு நடமாடினால் கூட (சுமார் 7-8 மி.மீ அளவு வரை) துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டவை. சமையல் கூடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கும் 9 வகையான முக்கிய குறைபாடுகளைக் கண்டறியும் வகையில் இந்த ஏஐ சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்துள்ளார்களா, சீருடை சரியாக உள்ளதா, சமையல் கூடத் தரை மற்றும் பாத்திரங்கள் தூய்மையாக உள்ளனவா என்பது முதல் எலிகள், ஈக்கள், கரப்பான் பூச்சிகளின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என்பது வரை அனைத்தையும் இந்த கேமராக்கள் அணு அணுவாகக் கண்காணித்துத் தவறு நடக்கும் பட்சத்தில் உடனடியாக டெல்லி தலைமையகத்திற்கு எச்சரிக்கை சிக்னலை அனுப்பிவிடும்.
ஏஐ சிஸ்டம் மூலம் ஏதேனும் விதிமீறல் அல்லது அசுத்தம் கண்டறியப்பட்டு எச்சரிக்கை சிக்னல் அனுப்பப்பட்டால், டெல்லி கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட கேண்டீன் மேலாளரைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வைப்பார்கள். இந்த எச்சரிக்கை வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அந்தத் தவறு கட்டாயம் சரிசெய்யப்பட வேண்டும் என்ற கடுமையான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், அந்தப் புகார் தானாகவே உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்று சமையல் ஒப்பந்ததாரர் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிஸ்டம் மூலம் தினமும் சராசரியாக 350 எச்சரிக்கைகள் உருவாக்கப்பட்டுத் தவறுகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய இரயில்வேயில் பயணிகளிடமிருந்து உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து 19,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருந்தன. ரயில்களில் வழங்கப்படும் உணவில் முடி மற்றும் பூச்சிகள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி ரயில்வேயின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஐஆர்சிடிசி நாளொன்றுக்குத் தோராயமாக 18 லட்சம் உணவுகளை (ஆண்டுக்குச் சுமார் 60 கோடி உணவுகள்) ரயில் பயணிகளுக்கு வழங்கி வரும் நிலையில், “ரயில்வே உணவு என்றாலே சுகாதாரமற்றது” என்ற பழைய பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிய இந்த ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு முறை பெரும் பக்கபலமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
