“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். பள்ளி விடுமுறை முடிந்து அண்மையில் மீண்டும் பள்ளிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற அஸ்வின், பள்ளிக்குச் செல்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு இளந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (25), காரையூரைச் சேர்ந்த கணேசன் (22) மற்றும் ஒரு 17 வயது சிறுவனுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நட்பு, எதிர்பாராத விதமாக ஒரு கொடூரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை.

சம்பவத்தன்று அஸ்வின் உட்பட நான்கு பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு, கீழக்காவனிப்பட்டி கண்மாய் பகுதிக்குச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் மத்தியில் சாதாரணமாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை, திடீரென வாக்குவாதமாக மாறி தகராறாக உருவெடுத்துள்ளது. இந்த மோதலின் போது, அரவிந்த் அஸ்வினைத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு அச்சமடைந்த 17 வயது சிறுவன், பயத்தில் அங்கிருந்து சற்று தூரம் விலகிச் சென்றுள்ளார்.

   

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அரவிந்தும் கணேசனும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், சிறுவன் அஸ்வினின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அஸ்வினின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த 17 வயது சிறுவன், அஸ்வின் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, கணேசனும் அரவிந்தும் அந்த சிறுவனை மிரட்டி தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று, திருப்புத்தூர் பகுதியில் இறக்கிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

   

கொலையைக் கண்டு உறைந்துபோன அந்த சிறுவன், உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறியுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அஸ்வினின் உடலைக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், தலைமறைவாக உள்ள அரவிந்த் மற்றும் கணேசனைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் சென்ற பள்ளி மாணவன் சில மணி நேரங்களிலேயே படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் திருப்புத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.