மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் விட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தடம் பதிக்கக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் பின்னணியில், விஜய்யின் மிக முக்கியமான அரசியல் வியூகம் இருப்பதாகப் பேசப்படுகிறது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்ட மசோதாக்களை அவையில் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ வேண்டிய சூழல் தவெக எம்பி-க்கு ஏற்படும். ஒருவேளை அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் தமிழக மக்களுக்கு எதிராக அமைந்தால், அது மக்கள் மத்தியில் தவெக அரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று விஜய் கருதுவதாகக் கூறப்படுகிறது.
தவெக தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள கட்சி என்பதால், மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கு வேண்டாம் என்ற நோக்கிலேயே விஜய் இந்த தந்திரமான முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்த ராஜ்யசபா சீட் பகிர்வு மூலம் தவெக-காங்கிரஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு சுவாரசியமாக மாறியுள்ளது.
