பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘WE THE LEADERS’ (நாம் தலைவர்கள்) என்ற பெயரில் தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட வெறும் 6 மணி நேரத்திலேயே, அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் 7,50,502 பேர் தங்களைப் பதிவு செய்து இணைந்துள்ளனர். முன்னதாக, நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியைத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் 30 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து அசுர சாதனை படைத்திருந்தார். தற்போது அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு கிடைத்து வரும் இந்த அசுர வேக வரவேற்பு, விஜய்யின் அந்த இமாலய சாதனையை முறியடிக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த அமைப்பை ஒரு மக்கள் இயக்கமாகத் தொடங்கியுள்ள அண்ணாமலை, இதற்கெனத் தனியாகக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து வருகிறார். கோயம்புத்தூரில் அமையவுள்ள ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நெறிமுறைகள் மற்றும் அரசியல் மையம்’ மூலம் புதிய தலைவர்களை உருவாக்கி, இந்த இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த புதிய நகர்வு தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
