ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் ஜூலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள செய்தி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் வழங்கப்படும் விநியோகப் பணிகளை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாக அச்சங்கம் எச்சரித்துள்ளது.
இத்திட்டத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதால் பணிகள் முடங்குவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மனிதாபிமானமற்ற முறையில் ஊழியர்கள் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாகவும் அச்சங்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் புறக்கணிப்பு அறிவிப்பால் சுமார் 20 லட்சம் பயனாளிகள் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாத வண்ணம் அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
