திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில், பழைய மற்றும் பயனற்ற வாகன பேட்டரி கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பேட்டரிகளை தயாரிப்பதற்கான அதிநவீன தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இந்தத் தொழிற்சாலையை தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன், செல்போன் மற்றும் வாகனங்களின் கழிவு பேட்டரிகளை குப்பையில் வீசாமல், மறுசுழற்சி முறையில் அவற்றிலிருந்து புதிய பேட்டரி தயாரிப்பதற்கான மூலக்கூறுகளை இந்த நிறுவனம் உருவாக்குகிறது என்று கூறினார். ஏற்கனவே கிண்டியில் இதன் முதல் தொழிற்சாலை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது புதுவாயலில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்போதைய மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த பெரிதும் துணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் புதிய தொழில்களைத் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு, லஞ்சம் மற்றும் கமிஷன் இல்லாத வெளிப்படையான சூழலை உருவாக்குவதாக உறுதியளித்தார். அங்கு தொழில் தொடங்குபவர்கள் எவருக்கும் ஒரு ரூபாய் கூட கமிஷன் தராமல், நேர்மையான முறையில் தங்களது நிறுவனங்களை தடையின்றி தொடங்க முழுமையாக உதவுவோம் என்று அவர் மேடையில் உறுதியளித்துப் பேசினார்.
