தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது பதவியையும், கட்சிப் பொறுப்பையும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் தனது முடிவை தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை பாஜக தலைமை தற்போது ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இன்று மதியம் சமூக வலைதள நேரலையின் வாயிலாக அண்ணாமலை தனது அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை மக்கள் முன்னிலையில் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
அரசியல் கட்டமைப்பில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 18 மாதங்களாகவே அவருக்கும் பாஜக தலைமைக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்ததாகவும், கடந்த டிசம்பர் 4ஆம் தேதியே தனது விலகல் முடிவை மேலிடத்திற்குத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்றும், தமிழ்நாடு குறித்த தனது பார்வையும் பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாக, ‘புதிய அரசியல் இயக்கம்’ ஒன்றை உருவாக்கப் போவதாக அண்ணாமலை பிரகடனப்படுத்தியுள்ளார். “என்னுடைய பாதை வேறு என்பதை பாஜக மேலிடத்திடம் தெளிவாகக் கூறிவிட்டேன்; தமிழர் பண்பாட்டின்படி அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் விலகியுள்ளேன்” என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அடுத்து நடைபெறும் தேர்தலில் தனது புதிய கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், தனது மொழியின் பெருமை, கலாசாரத்தின் சிறப்பு மற்றும் தமிழ்நாட்டின் பிராந்திய நலன் ஆகியவற்றுக்காகவே அரசியலில் நுழைந்ததாகவும், அதற்கான சரியான தருணம் தற்போது வந்துள்ளதாகவும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
இந்த புதிய இயக்கத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் அரசியல் ஆர்வலர்களுக்காக www.wetheleader.org என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இணையும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரில் முறையான அரசியல் பயிற்சி வழங்கப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக அரசியலின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி, புதிய பாதையை உருவாக்கத் தயாராகி வரும் அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, மாநில அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
An Important Announcement https://t.co/IcEnfaZGRK— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
