“வானில் தோன்றும் அதிசய மேஜிக்.. நெருக்கமாக வரும் வியாழன் மற்றும் வெள்ளி.. உங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்க மிஸ் பண்ணாதீங்க”..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

நமது பாடப்புத்தகங்களில் சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களைப் பற்றிப் படித்திருப்போம். அந்த கோள்கள் அனைத்தும் ஒன்றாக அணிவகுத்து நிற்கும் ஒரு விசித்திரமான வானியல் நிகழ்வை, நம் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே வெறும் கண்களால் தெளிவாகப் பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளான வியாழனும் (Jupiter), பூமியின் சகோதரி என்று அழைக்கப்படும் வெள்ளி கோளும் (Venus) வரும் ஜூன் 9-ஆம் தேதியன்று மிக நெருக்கமாக ஜோடியாகக் காட்சி தரவுள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த காலத்தில் ஒளி மாசுபாடு (Light Pollution) இல்லாததால் சனி கிரகம் வரை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது; ஆனால் இப்போது அப்படியில்லை என்றாலும், வருடத்தில் சில நாட்கள் மட்டும் பிரகாசமாகத் தெரியும் வியாழன் கோள், இந்த முறை வெள்ளியுடன் இணைந்து வடமேற்கு திசையில் மாலை சூரியன் மறைந்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் வரை காட்சி தரவுள்ளது.

விண்வெளியில் இந்த இரண்டு கோள்களும் உண்மையில் ஒரே நேர்க்கோட்டில் இல்லை என்பதுதான் இதில் உள்ள அறிவியல் உண்மையாகும். வார நாட்களில் வேண்டுமானால் வியாழனுக்கும் வெள்ளிக்கும் சம்பந்தம் இருக்கலாம், ஆனால் வானியல் ரீதியாக இரண்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவை விண்வெளியில் வெவ்வேறு தொலைதூரப் பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், நம் பூமியிலிருந்து பார்க்கும்போது அந்த இரண்டு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் நமக்கு மிக அருகில் இருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை (Optical Illusion) ஏற்படுத்துகின்றன. பூமியிலிருந்து வெள்ளி கோள் நமக்கு அருகில் இருப்பதால் அது மிக பளிச்சென்றும், வியாழன் கோள் வெகு தொலைவில் இருப்பதால் சற்று மங்கலாகவும் காட்சியளிக்கும்.

   

இந்த வானியல் மேஜிக் இத்துடன் முடிந்துவிடுவதில்லை, மாறாக இந்த கோள்களின் அணிவகுப்பில் புதன் கிரகமும் (Mercury) இணையவுள்ளது. ஜூன் 11 முதல் 15 வரை புதன் கிரகமும் இந்த இரண்டு கோள்களுடன் ஒரே நேர்கோட்டில் வரவுள்ளது; ஆனால், தொடுவானத்திற்கு மிக அருகில் அது தோன்றுவதோடு, மிகக் குறைந்த நேரமே நீடிக்கும் என்பதால் புதனைப் பார்ப்பது சற்றே கடினமான காரியமாகும். இதன் உச்சகட்டமாக, ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அழகிய பிறை நிலவும் இந்த ‘பிளானட் பரேட்’ (Planet Parade) எனப்படும் கோள்களின் அணிவகுப்பில் இணையவுள்ளதால், இந்த அரிய விண்வெளி அதிசயத்தை வானியல் ஆர்வலர்கள் யாரும் தவறவிட வேண்டாம் என விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.