தலைக்கேறிய போதையில் சாலையில் விழுந்து கிடந்த சிறுமி… காரில் சென்ற சிறுமிக்கு என்ன நடந்தது..? மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமையா..?

By Swetha on ஆனி 4, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது கார் ஓட்டுநரான மாரீசெல்வன் என்பவர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வசிக்கும் ஆதிரா என்ற திருநங்கை மற்றும் அவரது நண்பர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். பின்னர், மாலை 5 மணி அளவில் ஆதிராவின் தங்கையான சிறுமியைத் தனது காரில் வெளியில் அழைத்துச் சென்ற மாரீசெல்வன், மாலை 6:30 மணியளவில் அவரை திருச்சி கீரைக்கடை பஜார் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது சிறிது தூரம் தட்டுத்தடுமாறி நடந்து சென்ற அச்சிறுமி, போதை தலைக்கேறிய நிலையில் சுயநினைவின்றி சாலையில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போலீசாருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சிறுமியை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இரவு 7:30 மணியளவில் மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த கார் ஓட்டுநர் மாரீசெல்வனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த மாரீசெல்வனும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிறுமியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரது சித்தி, சிறுமிக்கு ஏதோ ஜூஸில் கலந்து கொடுத்து இவ்வாறு செய்துள்ளதாகவும், தன்னைச் சுற்றி அதிக ஆண்கள் இருந்ததாகச் சிறுமி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதற்குச் சிறுமியின் அக்காவான திருநங்கையும் ஒரு காரணம் என்பதால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.