ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் அதோனி பகுதியைச் சேர்ந்த கங்கம்மா என்ற பெண்ணிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மலு என்பவருடன் கங்கம்மாவிற்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்தத் தொடர்பை கங்கம்மாவின் 15 வயது மூத்த மகன் வீரேந்திரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கங்கம்மா, தனது காதலன் நரசிம்மலுவுடன் சேர்ந்து கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீரேந்திராவை இரவோடு இரவாகக் கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் புதைத்துள்ளார்.
மறுநாள் மாலை காவல் நிலையம் சென்ற கங்கம்மா, தனது மகனைக் காணவில்லை என்று நாடகமாடிப் புகாரளித்தார். போலீசார் இரண்டு வருடங்களாகத் தேடி வந்த நிலையில், கங்கம்மா பணத்திற்கு ஆசைப்பட்டு “போலீசார் தனது மகனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், கங்கம்மாவின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். இதில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மகனைக் கொலை செய்த கொடூரத்தை அவரே ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வீரேந்திராவின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்த போலீசார், கங்கம்மாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது அவருக்குக் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான கள்ளக்காதலன் நரசிம்மலுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற தாயே கள்ளக்காதலை கண்டித்த மகனைக் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
