திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரில் அமைந்துள்ள சக்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன் மற்றும் பட்டவன் கோவில்களின் வருடாந்திர உற்சவ திருவிழா சமீபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த விழாவில், அம்மன் வீதிஉலா, பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை, இப்பகுதிக்கே உரிய தனித்துவமான ‘சேத்தாண்டி வேடம்’ என்னும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின்படி, நேர்த்திக்கடன் செலுத்தவிருக்கும் பக்தர்களின் முகத்தில் வர்ணப் பொடிகள் பூசப்பட்டு, மேளதாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் முன்பாக வரிசையாக அமரவைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதம் மற்றும் கழனித் தண்ணீரை மண் கலயத்தில் எடுத்து வந்தனர். பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் செருப்பு மற்றும் துடைப்பத்தை அதில் நனைத்து, அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் மாற்றி மாற்றி அடித்தும், கால்களால் தலையில் உதைத்தும், செருப்பு மாலை அணிவித்தும் தங்களின் வினோதமான நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த விசித்திர வழிபாட்டிற்குப் பிறகு, பக்தர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சேற்றில் குதித்து, ஒருவர் மீது ஒருவர் சேற்றைப் பூசி மகிழ்ந்தனர். இறுதியாக, கோவில் குளத்தில் நீராடி தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.
“துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் மனிதர்களிடையே சகிப்புத்தன்மை பெருகும்; சண்டை சச்சரவுகள் இன்றி மக்கள் எப்போதும் ஒற்றுமையுடன் வாழ இது வழிவகுக்கும்.” — உள்ளூர் பக்தர்கள்
தலைமுறை தலைமுறையாக இந்த வினோத வழிபாட்டை நடத்தி வருவதாகக் கூறும் இப்பகுதி மக்கள், கோடை காலத்தில் உடலில் சேறு பூசிக் கொள்வதால் சரும நோய்கள் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் அண்டாது என்ற மருத்துவ காரணத்தையும் முன்வைக்கின்றனர். இந்த வினோத நேர்த்திக்கடன் வழிபாட்டைத் தொடர்ந்து, அம்மன் பூஞ்சோலை சென்றடைதலுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா பக்திப் பெருக்குடன் நிறைவுற்றது.
