தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஓய்ந்துள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக, இரு கட்சிகளின் தமிழகத் தலைமையிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தேர்தல் செலவுகளுக்காக டெல்லி மேலிடம் கொடுத்த நிதியை சில தலைவர்கள் முறைகேடு செய்துவிட்டதாக எழுந்துள்ள புகார்கள் இரு தரப்பிலும் புயலைக் கிளப்பியுள்ளன.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருந்து வந்தார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, தனக்கு தேசிய அளவிலோ அல்லது மத்திய அரசிலோ முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அண்மையில் டெல்லி சென்ற அவர், அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரைச் சந்தித்து தமிழக பாஜகவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். தேர்தல் நிதியைச் சில தலைவர்கள் ‘அமுக்கியதாக’ அவர் கொடுத்த புகாரும், அதிருப்தி காரணமாக அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்களும் பாஜகவிற்குள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
அண்ணாமலையின் இந்த அதிரடிப் புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியது, தேர்தல் செலவினங்களில் முறைகேடு மற்றும் வேட்பாளர் தேர்வில் நிலவிய குளறுபடிகள் குறித்து தேசிய தலைமை அவரிடம் விளக்கம் கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையை சமாதானப்படுத்தி கட்சியில் தக்கவைக்க தேசிய அளவிலான பொறுப்பு வழங்குவது குறித்தும், அதே நேரத்தில் தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பில் அதிரடி மாற்றம் செய்வது குறித்தும் டெல்லி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதேபோன்றதொரு தலைமை மாற்றப் புயல் தமிழக காங்கிரஸ் கட்சியிலும் வீசத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தலைமை மாற்றம் குறித்து டெல்லி மேலிடம் ஆலோசித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் ஏற்கனவே அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வில் உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டு, பண பலம் கொண்டவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளிப்படையாக வெளியிட்ட அறிக்கை, உட்கட்சிப் பூசலைத் தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.
தேர்தல் தோல்வி மற்றும் நிதி முறைகேடு புகார்கள் குறித்து காங்கிரஸ் மேலிடம் தனியாக ஆய்வு நடத்தி வரும் நிலையில், செல்வப்பெருந்தகை மாற்றப்படலாம் என்ற பேச்சுகள் வலுவாக எழுந்துள்ளன. ஆனால், இந்தத் தலைமை மாற்றம் நிகழ்ந்தால் தமிழக காங்கிரஸில் மேலும் பெரிய பிளவு ஏற்படும் என்றும், அதிருப்தியில் உள்ள சில மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தனிக்கட்சி ஆரம்பிக்கும் நோக்கில் ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரு முக்கிய தேசிய கட்சிகளிலும் நிலவும் இந்த உட்கட்சி மோதல்களும், டெல்லியின் அடுத்தகட்ட நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
