திமுக-வுக்கு விழுந்த பலத்த அடி!.. 2 மதிமுக எம்எல்ஏக்கள் அதிரடி ராஜினாமா?.. ஸ்டாலினுக்கு காத்திருக்கும் அடுத்த ட்விஸ்ட்..!!

By Muthu Mani on ஆனி 2, 2026

Spread the love

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் சீர்காழியில் செந்தில் செல்வனும், கடையநல்லூரில் ராஜேந்திரனும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேநேரம், மொடக்குறிச்சியில் செந்தில் நாதனும், மதுரை தெற்கில் பூமிநாதனும் ம.தி.மு.க.வின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தனர். தற்போது வென்றுள்ள இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதோடு, ம.தி.மு.க.வின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வைகோவுக்குக் கட்சி நிர்வாகிகள் கடுமையான அழுத்தம் கொடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

ம.தி.மு.க.வின் இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிள்ளையார் சுழி போடும் விதமாக, அண்மையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருந்த முதலமைச்சர் விஜய்யை, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “துரதிர்ஷ்டவசமாக நாங்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம், ஆனால் இனி நாங்கள் தனி இயக்கம்; உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் அப்போது த.வெ.க.வுக்கு ஆதரவு தர முடியாமல் போய்விட்டது” என்று ஓப்பனாகப் பேசி தி.மு.க. தரப்பை அதிர்ச்சியடைய வைத்தார்.

   

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தன என்றும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டு மக்கள் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அளிக்காவிட்டாலும், த.வெ.க.வைத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வைத்துள்ள தீர்ப்பை ‘மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என மதிக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார். புதியதாகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசு சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் அதற்கு ஓராண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், தவறிழைக்கும் பட்சத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளோ அல்லது தங்களைப் போன்ற வெளியில் இருக்கும் இயக்கங்களோ தாராளமாகக் கண்டனங்களைப் பதிவு செய்யலாம் என்றும் துரை வைகோ கூறியிருப்பது ம.தி.மு.க. விரைவில் த.வெ.க. பக்கம் சாயப் போவதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.