நண்பர்களைக் காப்பாற்றிய நிஜ ஹீரோ… அமெரிக்க ஆற்றில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்… இந்திய மாணவர் செய்த உருக வைக்கும் செயல்..!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

அமெரிக்காவில் படிப்பு முடித்துவிட்டு பணியில் சேரவிருந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர், ஆற்றில் மூழ்கிய தனது மூன்று நண்பர்களைக் காப்பாற்றிவிட்டு, துரதிர்ஷ்டவசமாகத் தான் மட்டும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் லூசியானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர ரெட்டி குடும்பத்தினர், தற்போது ஹைதராபாத் அருகே உள்ள கவுடி பள்ளி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது 23 வயது மகன் அனுரூப் ரெட்டி, அமெரிக்காவின் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை சமீபத்தில் தான் படித்து முடித்திருந்தார்.

   

இந்தியாவில் பிடெக் முடித்ததும் நல்ல வேலை கிடைத்தபோதிலும், அமெரிக்காவிற்குச் சென்று சாதிக்க வேண்டும் என்ற கனவோடு கடந்த 2024-ஆம் ஆண்டு அனுரூப் அங்கு சென்றுள்ளார். படிப்பு முடிந்து விரைவில் புதிய பணியில் சேரவிருந்த நிலையில், விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். இதன்படி, அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் லூசியானா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற டோலிடோ பெண்ட் நீர்த்தேக்கம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சபீன் ஆற்றுப் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். சுமார் 890 கி.மீ நீளமுடைய இந்த சபீன் ஆறு, அதிக நீர்வரத்தும், சில பகுதிகளில் ஆபத்தான ஆழமும் கொண்ட நீச்சல் அடிக்க சவாலான ஒரு இடமாகும்.

   

அங்கு நண்பர்களுடன் ஜாலியாகப் பொழுதை கழித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அனுரூப்பின் நண்பர்கள் மூன்று பேர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதைப் பார்த்து சற்றும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்ட அனுரூப், வேகமாக ஆற்றில் நீந்திச் சென்று தனது மூன்று நண்பர்களையும் ஒவ்வொருவராக மீட்டுப் பத்திரமாகக் கரையில் சேர்த்துள்ளார். ஆனால், நண்பர்களைக் காப்பாற்றிவிட்டு அவர் கரையேற முயன்றபோது, ஆற்றிலிருந்த மீன்பிடிக்கும் ஒயர் (Fishing wire) அவரது காலில் பலமாகச் சுற்றிக் கொண்டது.

 

அதே நேரத்தில் ஆற்றில் வெள்ளத்தின் வேகமும் திடீரென அதிகரித்ததால், காலில் ஒயர் சிக்கிய நிலையில் அனுரூப்பால் தப்பிக்க முடியாமல் ஆற்றில் மூழ்கினார். கரையில் இருந்த நண்பர்கள் அவரைப் காப்பாற்றப் போராடியும் பலனளிக்காமல், அனுரூப் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சோகத்தில் மூழ்கியுள்ளனர். தனது மகனின் கனவு இப்படிப் பாதியிலேயே முடியும் என்று தாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ள பெற்றோர், அனுரூப்பின் உடலை இந்தியாவிற்கு விரைவாகக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.