கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அகிலா (24), தன் கணவரைப் பிரிந்து அஷ்கர் (31) என்பவருடன் திருவனந்தபுரம் அருகே வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை அர்ஷித், உடலில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
தொடக்கத்தில் குழந்தை உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாக அஷ்கர் நாடகமாடினார். ஆனால், உடற்கூறாய்வு (Postmortem) அறிக்கையில், குழந்தையின் உடலில் தீக்காயங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் உட்பட மொத்தம் 51 அடிதடி காயங்கள் இருந்ததும்,Internal Bleeding எனப்படும் உள் ரத்தப்போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததும் அம்பலமானது. சம்பவம் நடந்த போது தாய் அகிலா நடன நிகழ்ச்சி ஒன்றுக்காகத் தமிழ்நாடு சென்றிருந்தாலும், குழந்தைக்குத் தொடர்ந்து நடந்து வந்த சித்திரவதைகளை மறைத்ததாக அவரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கேரளா போலீஸார், தாய் அகிலா மற்றும் அவரது காதலன் அஷ்கர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். முன்னதாகவே குழந்தையின் கைகளில் கட்டப்பட்டிருந்த கட்டுகளைப் பார்த்துவிட்டு, அஷ்கர் மீது சந்தேகம் கொண்டு குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்தும், போலீஸார் அதைச் சரியாகக் கண்டுகொள்ளாததே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்ததாகக் குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
