சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வுக்குள் வெடித்த உட்கட்சி மோதல்கள் தற்போது ஓரளவுக்கு அடங்கி, பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். அனைவரும் இபிஎஸ் பக்கம் சாய்ந்த நிலையிலும், கட்சியின் முக்கியத் தூண்களான சி.வி. சண்முகம் மற்றும் சி.வி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரின் அடுத்தகட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. குறிப்பாக, வடதமிழகத்தில் அதிமுக-வின் முகமாக விளங்கும் சி.வி. சண்முகத்தை தங்கள் பக்கம் இழுக்க ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிரமாக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், இன்று மயிலம் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த சி.வி. சண்முகம், தன்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த மக்களுக்கு முழுமையாகக் கடமையாற்றுவேன் என்றும், எந்தக் கோரிக்கை என்றாலும் தன்னைத் தாராளமாக அணுகலாம் என்றும் பேசினார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்த சண்முகம், தற்போது தனது எம்.எல்.ஏ பதவியிலேயே நீடிக்கப் போவதை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் செல்வாக்குமிக்க அவர், விலகிச் செல்லாமல் மக்கள் பணியில் தொடர்வது அதிமுக தொண்டர்களுக்கும், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த தலைவர்களான தங்கமணி மற்றும் வேலுமணி மூலமாக சி.வி. சண்முகத்தைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், அவர் விரைவில் இபிஎஸ்-ஸைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம், எஸ்பி. வேலுமணியுடன் இணைந்து எடப்பாடிக்கு ஆதரவாகச் சபாநாயகரிடம் கடிதம் அளித்த சி.வி. விஜயபாஸ்கர், திடீரென புதுக்கோட்டையில் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளது அதிமுக தலைமைக்குக் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ்-ஸின் முக்கியப் பலமாகக் கருதப்படும் விஜயபாஸ்கரின் இறுதி முடிவுக்காக இபிஎஸ் தரப்பு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் கட்சியில் நீடிப்பதே அதிமுக-வின் எதிர்காலத்திற்குப் பலம் சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
