தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா தெய்வேந்திரன் என்பவர், தன்னை தவெக கட்சியின் “தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை” என்று குறிப்பிட்டுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு அலப்பறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்திப்பது, மகளிர் குழுக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்பது போன்ற நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து, தவெக தலைமையைக் டேக் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாகப் பதிவிடுவதைத் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) ஆய்வு செய்தபோது, அவரும் இணைந்து ஆய்வு செய்வது போல ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மக்கள் பிரதிநிதியாக இல்லாத தவெக கட்சியினர் இதுபோன்று அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஆய்வு என்ற பெயரில் வீடியோக்கள் வெளியிடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தவெக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் இதுகுறித்து அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணிக்கு அதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி யாரும் அரசு அல்லது தனியார் அலுவலகங்களை அணுகக் கூடாது என்றும், அவ்வாறு கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி தேனியில் அரங்கேறிய இந்த ரீல்ஸ் விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
