உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஒருவர், சமீபத்தில் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அந்தப் பெண் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். வெறும் 22 வயதிற்குள்ளாகவே அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், “5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6வது குழந்தை?” என்று மருத்துவர் கேட்க, அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் இன்னும் வேதனையளிப்பதாக உள்ளது. தனக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்துவிட்டதாகவும், வரிசையாகப் பெண் குழந்தைகளே பிறந்ததால், தற்போது ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கணவரும் குடும்பத்தினரும் மற்றொரு ஆண் குழந்தையை தீவிரமாக விரும்புவதால், அவர்களின் ஆசையை நிறைவேற்றவே தான் 6வது முறையாகக் கர்ப்பம் தரித்திருப்பதாக அந்தப் பெண் மிகவும் இயல்பாகக் குறிப்பிட்டுள்ளார். இதைக்கேட்டு கடுப்பான மருத்துவர், இளம் வயதில் தொடர்ச்சியாகக் கர்ப்பமடைவதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்தத் தம்பதியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ உலகின் கூற்றுப்படி, ஒரு பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும், இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கும் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை இடைவெளி இருப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த இளம் பெண்ணோ உடலைத் தேற்றிக் கொள்ள எந்தவொரு அவகாசமும் இல்லாமல், தொடர்ச்சியான கர்ப்பங்களால் கடுமையான ரத்த சோகை ஏற்பட்டு, உடல் ரீதியாக முற்றிலும் பலவீனமடைந்துள்ளார். போதிய இடைவெளி இல்லாத இத்தகைய தொடர் கர்ப்பங்கள் பிரசவ கால சிக்கல்களை அதிகரிப்பதுடன், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் அல்லது பிறக்கும் குழந்தை மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
அறிவியல் தொழில்நுட்பம் உலகை ஆளும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும், ஆண் வாரிசு மோகத்திற்காக ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரின் ஆசைக்காகத் தன் உடலையும் உயிரையும் பணையம் வைக்கும் இத்தகைய பெண்களின் நிலை, சமூகத்தில் இன்னும் பெண் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பாலின சமத்துவம் குறித்த தேவையை உரக்கச் சொல்கிறது. சட்டம் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் மனநிலையில் மாற்றம் வராதவரை இளம் பெண்களின் ஆரோக்கியமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே நீடிக்கும் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
