தமிழ்நாட்டில் வரும் ஜூன் 4, 2026 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டிற்கான புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் (Bus Pass) மாணவர்களின் கல்வி நிறுவனங்களிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால், அவை கிடைக்கும் வரையிலான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து அரசு பேருந்துகளில் எவ்வித சிரமமுமின்றி இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, அடுத்து திறக்கப்பட உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு ஐ.டி.ஐ (ITI) மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையைக் (ID Card) நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க போக்குவரத்துக் கழக அலுவலர்கள் அடங்கிய தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஏறி, இறங்குவதற்காக உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றும், மாணவர்களைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும் என்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
