தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் நடிகர் விஜய் மேற்கொண்ட முதல் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. தனது இரண்டு நாள் பயணத்தின் போது, நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் கைது விவகாரம், மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மேகதாட்டு அணை விவகாரம் மற்றும் வான்வழி பாதுகாப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் விஜய் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும், இந்த டெல்லி பயணத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய சில நிகழ்வுகள் முதல்வர் விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நிதியமைச்சரின் சந்திப்புக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், “வேறு முக்கியப் பணிகள் இருப்பதாகக்” கூறி உள்துறை அமைச்சகம் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தது. அதிர்ச்சியூட்டும் விதமாக, அதே குறிப்பிட்ட நேரத்தில் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனை அமித்ஷா சந்தித்துப் பேசியுள்ளார். இதனால், தமிழக முதல்வர் விஜய்யுடனான சந்திப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மறுபுறம், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்கவிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சந்திப்புகளும் சாத்தியமாகவில்லை. ஒருவேளை நேற்றிரவே இந்த சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், முதல்வர் விஜய் நேற்றே சென்னை திரும்பியிருக்க முடியும். அவ்வாறு செய்யாமல், இன்று காலை வரை அவர் டெல்லியிலேயே காத்திருந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இறுதியாக, எந்தவொரு முக்கியத் தலைவர்களின் கூடுதல் ஆதரவும் கிடைக்காத நிலையில், அவர் டெல்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.
அனைத்திற்கும் மேலாக, டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் போது முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காமல் தவிர்த்தது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு முன்பு டெல்லி சென்ற தமிழக முதல்வர்கள் எவரும் செய்தியாளர்களைச் சந்திக்காமல் திரும்பிய சரித்திரமே இல்லை; மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்றவர்களே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டுத்தான் சென்றனர். டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதன் மூலம் தேசிய அளவில் தமிழ்நாட்டின் குரலையும், தனது கோரிக்கைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் பொன்னான வாய்ப்பை விஜய் வீணடித்துவிட்டார் என்றும், இதனால் அவரின் முதல் டெல்லி பயணம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் அரசியல் தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
