தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை காரணமாக நாடு முழுவதும் 7,634 பெண்கள் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2024ஆம் ஆண்டில் இந்த மரணங்களின் எண்ணிக்கை 5,737 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய புள்ளிவிவரத்தோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய 1,900 மரணங்கள் குறைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளித்தாலும், தற்போதைய நிலவரப்படியும் நாட்டில் நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் தனது உயிரை இழக்கிறாள் என்ற கசப்பான உண்மையை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இந்த கொடுரமான மரணங்கள் ஒட்டுமொத்த நாட்டைவிடவும், குறிப்பிட்ட சில மாநிலங்களிலேயே மிக அதிக அளவில் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் மிக அதிகமாக 2,038 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த வரதட்சணை மரணங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான பட்டியலில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகாரில் 1,078 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 450 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவற்றுடன் ராஜஸ்தான் (386 மரணங்கள்), மேற்கு வங்கம் (337 மரணங்கள்) ஆகிய மாநிலங்களும் இந்த வரிசையில் முன்னிலையில் உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
