தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்றதாகக் கூறி, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்தனர். பின்னர் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அவர்கள் கொறடா உத்தரவை மீறி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தது. மறுபுறம், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு எஸ்.பி. வேலுமணியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், சி. விஜயபாஸ்கரைக் கொறடாவாகவும் நியமிக்கக் கோரி சி.வி. சண்முகம் தரப்பும் மனு அளித்ததால் அதிமுக அதிகாரப்பூர்வமாக இரு பிரிவுகளாக உடைந்தது.
தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்குப் பிரதிபலனாக தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என சி.வி. சண்முகம் தரப்பு எதிர்பார்த்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அவர்களுக்கு எவ்வித அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த எஸ்.பி. வேலுமணி, “எங்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடு மட்டுமே, பிளவு இல்லை; எப்போதுமே இபிஎஸ் தான் எங்கள் பொதுச்செயலாளர்” எனக் கூறி அந்தப் பக்கமே சாயத் தொடங்கினார். இதற்கிடையே, வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் இபிஎஸ் பக்கமும், மற்றொரு 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாகத் தவெகவிலும் இணைந்ததால் வேலுமணி அணியின் பலம் குறையத் தொடங்கியது.
இதையடுத்து இரு அணிகளையும் இணைப்பதற்கான சமாதான முயற்சிகள் தொடங்கின. நேற்று சி.வி. சண்முகம் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட தூதுக்குழுவினர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, கட்சியின் நலன் கருதி இருதரப்பும் இணையலாம் என்றும், முன்னதாகப் பறிக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும், சபாநாயகரிடம் அளித்த புகார் மனுக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வேலுமணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கோரிக்கைகளைக் கறாராக நிராகரித்து, “கட்சியில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்கிறேன், ஆனால் பதவிகள் எதையும் திருப்பித் தர முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் இந்த மெகா இணைப்பு முயற்சி முற்றிலும் தோல்வியில் முடிந்தது.
இபிஎஸ் காட்டிய கறார் தன்மையால் அதிர்ச்சியடைந்த எஸ்.பி. வேலுமணி அணியினர், தோல்வி முகத்துடன் அங்கிருந்து வெளியேறி அடுத்தகட்ட நகர்வு குறித்து இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அப்படியே ஏற்றுக்கொண்டு எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துவிடுவதா அல்லது தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ஒரேடியாக ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் அதிகாரப்பூர்வமாக ஐக்கியமாகிவிடுவதா என்பது குறித்துப் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இவர்களின் இந்த இறுதி முடிவு, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்டமாகப் பெரும் பரபரப்பையும் அதிரடித் திருப்பங்களையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
