“சினிமா மாதிரி ஒரே நாள்ல மாத்த முடியாது..!” தமிழக முதல்வர் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த வையாபுரி..!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் வையாபுரி, தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள தனது நண்பர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தவெக ஆட்சி அமைந்து கடந்த இரண்டு வாரங்களாக விஜய் நினைத்தது போல சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மகிழ்ச்சி வெளியிட்டார். மேலும், சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்றிவிட முடியாது என்றும், இரவு நேரத்தில் 144 தடை உத்தரவு போடுவதைப் போல எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற இயலாது, காலம் செல்லச் செல்லத்தான் அனைத்தும் சரியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அமைச்சரவையில் பிராமணர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து விமர்சிப்பவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்தார். கடந்த காலங்களில் சாதி பலம் உள்ளவர்களுக்கே சீட் கொடுக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை என்றார். தமிழக மக்கள் வேட்பாளர்களின் முகம், பெயர், சாதி, மதம் என எதுவுமே தெரியாமல், விஜய்யின் முகத்திற்காக மட்டுமே வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள், அங்கு போட்டியிட்ட ரமேஷின் சாதி, மதம் எதையும் பார்க்காமல் விஜய் சாருக்காகவே வாக்களித்தனர் என்றார்.

   

தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை மாற்றச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், யாரை நிறுத்த வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது விஜய்க்கு நன்றாகத் தெரியும் என்றும் கூறினார். “ஒருமுறை முடிவு செய்தால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற திரைப்பட வசனத்தைப் போலத்தான் விஜய் அரசியலிலும் உறுதியாகச் செயல்படுவார் எனத் தான் நம்புவதாகவும், விஜய் தற்போது பிஸியாக இருப்பதால் நேரில் சந்திக்கவில்லை என்றும், விரைவில் அவரைச் சந்தித்து வாழ்த்து கூற உள்ளதாகவும் வையாபுரி தெரிவித்தார்.